ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் அலுவலர் வி சிவலிங்கம், துணைத்தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் தெற்கு மற்றும் வடக்கு பண்ணைகளில் விதை உற்பத்தி நடைபெற்று வருகிறது இங்கு விவசாயிகள் விதை நெல் வாங்குவதற்கும் பயிற்சியில் ஈடுபடுவதற்கும் வந்து செல்கின்றனர் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் வழிகள் பழுதடைந்துள்ளதாலும் போதிய மின் வசதிகள் இல்லாததாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட வேண்டும். ஆடுதுறை பேரூராட்சிக்கு சொந்தமான வீரசோழன் திருமண மண்டபம் அருகில் உள்ள காலி இடத்தில் முன்னாள் அமைச்சர் கோ சி மணி மணி மண்டபம் அமைக்கப் பட வேண்டும். ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அனைத்து வசதிகளுடன் செப்பனிடப்பட வேண்டும்.
ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஆடுதுறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மருத்துவக்குடி நாக குளம் அருகில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நமக்கு நாமே திட்டம் மூலம் உடற்பயிற்சி கூடம் அமைப்பது திரவுபதி அம்மன் கோயில் அருகில் சிறுவர்கள் பூங்கா அமைப்பது சுகாதார வளாகங்கள் சீரமைப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் கட்டிடம் பழுது நீக்குவது ஆடுதுறை பேரூராட்சி பகுதியிலுள்ள குளம் குட்டைகள் தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்குவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
