தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட உரங்களை விற்பனை செய்த தொகையை தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கல்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உரங்களை தனியாரிடம் விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப்பட்ட தொகையை தூய்மையாளர்களுக்கு ஊக்கத் தொகையாக நேற்று மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது.

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று “எனது குப்பை – எனது பொறுப்பு” மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடக்க விழாவில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாநகர நகர்நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம் வரவேற்றார். மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், மண்டலத் தலைவர்கள் மேத்தா, ரம்யாசரவணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாநகர மேயர் சண்.ராமநாதன் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கி பேசியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சியில் பத்து இடங்களில் மக்கும், மக்கா குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகளை அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கிறோம். மக்கும் குப்பைகளையிலிருந்து உயிர் உரங்கள் ஆங்காங்கே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரங்களை தனியாருக்கு விற்பனை செய்து வருகிறோம். இதில் கிடைத்த தொகையை தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்து, அதற்காக நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு தற்போது ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாநகராட்சியில் குப்பைகள் தேங்காத வகையில் சிறப்பாக பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் பொறுப்புணர்வுடனும், கோபப்படாமல் அன்புடனும் பணியாற்ற வேண்டும். மாநகரில் எங்கும் குப்பைகள் காணப்பட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த மாநகராட்சியை தூய்மையான, சுகாதாரமான மாநகராட்சியாக மாற்ற தூய்மைப்பணியாளர்கள் அவசியம் ஒத்துழைப்பை தர வேண்டும்.
மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரப்படும். இதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது என்றார்.
படவிளக்கம்: தஞ்சாவூர் மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை மேயர் சண்.ராமநாதன் வழங்குகிறார். அருகில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மற்றும் ஆணையர் க.சரவணக்குமார் பலர் உள்ளனர்.
