பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவதை கண்டுகொள்ளாத சுகாதார அலுவலர்

பாலாறில் பலவித கோளாறு..
வேலூர் மாவட்டத்தில் பாய்ந்து செல்லும் பாலாற்றில் பலவித கோளாறுகள் இருந்து வருகின்றன. இதை யாரும் தீர்த்தப்பாடு இல்லை. அரசும் கண்டு கொள்ளவில்லை, அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் பரிதாப நிலையில் நாளுக்கு நாள் சென்று கொண்டுள்ளது பாலாறு. குறிப்பாக சென்னையில் உள்ள கூவம் போல மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலாறு என்றால் அதற்கு ஒரு தனி பெயர் உண்டு. அந்த பெயர் இன்று மருவி கூவம் போல உருமாறியுள்ளது வேதனைக்குரியது, வெட்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்டு சொல்லலாம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு அக்கறையும் பொறுப்பும் இல்லை என்றாலும் கூட, அண்மையில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூருக்கு வருகை தந்தார்.
அவர் பல்வேறு அரசு மற்றும் திமுக சார்ந்த கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிலையில் காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோயில் பகுதியில் இருந்து நடந்து சென்று பாலாற்றின் கரை மீது ஏறி பாலாற்று பாலத்தில் உள்ள பக்கவாட்டு நடை மேடையில் நடந்து சென்றார்.

அப்போது பாலாற்றில் புதர் மண்டி சீமை கருவேல மரங்கள் மற்றும் வேலிகாத்தான் முட்கள் அடர்ந்து வளர்ந்து கிடந்தது. இது உதயநிதி ஸ்டாலின் கண்களில் எப்படி படாமல் தப்பித்தது என்று தெரியவில்லை.
ஒருவேளை அவருடன் நடைபயிற்சி வந்த திமுக மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ. பி.நந்தகுமார் பேசிக்கொண்டே அவரது கவனத்தை திசை திருப்பி அழைத்துச் சென்று விட்டாரா? அல்லது அரசு அதிகாரிகள் துணை முதல்வரின் கவனத்தை திசை திருப்பி அழைத்துச் சென்றனரா? என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் சென்றுவிட்டாரா? என்றும் தெரியவில்லை. வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் இந்த துணை முதல்வர் நடைபயிற்சியின் போது உடன் சென்றார். அவர் எதையும் காண்பிக்காமல் அழைத்துச் சென்று விட்டாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு துணை முதல்வர் நான்கு பக்கமும் பார்க்க வேண்டும். அவர் நேராக பார்த்துக் கொண்டே நடந்த சென்று விட்டாரா என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று சொல்கின்றனர் நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள்.
ஏனென்றால் வேலூர் மாநகராட்சியின் தில்லாலங்கடி வேலைகள் வெளியில் தெரியாமல் இருக்க குறிப்பாக துணை முதல்வரின் கவனத்திற்கு செல்லாமல் இருக்க அதிகாரிகள் அவரை அழைத்துக்கொண்டு ஓடிவிட்டனரா அல்லது ஓட்டம் பிடித்தனரா என்று தெரியவில்லை.
ஏனென்றால் மாநகராட்சியின் குப்பை கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள், மாட்டு இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகள் கொட்டப்படும் ஒரு கூவம் போல மாற்றி விட்டனர் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை.
இது ஒருபுறம் இருக்க கழிவுநீர் வந்து கொண்டே உள்ளது பாலாற்றில், அதுவும் சி எம் சி மருத்துவமனையின் கழிவுகள் இடைவிடாது வெளியேற அவர்கள் சிலிண்டர் பைப் வைத்து பாலாற்றில் இணைத்துள்ளனர். இது இதுநாள் வரை எந்த அதிகாரியின் கண்களிலும் படவில்லையா? மாவட்ட ஆட்சியர் கண்களில் கூட படவில்லையா? என்பது ஒரு பெருத்த சந்தேகமாகவே இருந்து கொண்டுள்ளது.

பொதுநலம் குறைந்து சுயநலம் அதிகரித்ததின் வெளிப்பாடுதான் இந்த வரலாற்றின் பரிதாப நிலை. பாலாற்றுக்கு உணர்ச்சி இருந்தால் பாலாறு பாய் போட்டு அழும் என்ற பரிதாப நிலையை இங்கே குறிப்பிட்டு சொல்ல முடியும். அந்த அளவிற்கு பாலாற்றில் அனைத்தையும் கொண்டு போய் கொட்டுகின்றனர். இது என்ன ஹோல்சேல் குப்பை தொட்டியா? என்று தெரியவில்லை.
மொத்தமாக சுத்தமாக கண்ணாடி போல் செல்லும் தண்ணீரில் கழிவுகள் குறிப்பாக விஷத் தன்மை கொண்ட கழிவுகள் கலக்கப்படுவது முற்றிலுமாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக கேரளாவில் இருந்து கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது அனைவருக்கும் நன்கு தெரியும்.

அதே போன்று பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் வேலூர் மாவட்ட பொது மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
தற்போது வருங்கால சந்ததியினரை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விரைவில் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கவும் தயங்க மாட்டார்கள் என்று தெரிய வருகிறது.
ஆக மொத்தத்தில் பாலாற்றை காக்க அமைக்கப்பட்ட பாலாறு பாதுகாப்பு இயக்கம் இதில் தனிக் கவனம் செலுத்தி யார் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கையை விரைந்து எடுக்க முன்வர வேண்டும்.
அதாவது பொதுநல வழக்கை தொடர்ந்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே வேலூர் மாநகர் வாழ் பொது மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. இது விரைவில் நடக்கும் அதுவரை பொறுத்திருப்போம்.
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
