திருச்செந்தூரில் டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் 65 பவுன் தங்கநகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் கீழவெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகுமார் இவர் டாஸ்மாக் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் கலாவதி தனக்கு சொந்தமான 45 பவுன் எடையுள்ள தங்க நகைகளை வீட்டின் பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்துள்ளார்.

இரவு கலாவதி வீட்டில் கீழே அறையில் படுத்து தூங்கியுள்ளார். அவரது மகன் பாலகுமார் முதல்மாடியில் உள்ள டிராயரில் தனக்கு சொந்தமான 20 பவுன் நகைகளை வைத்திருந்திராம். மேலும் வீட்டின் பால்கனி கதவு உட்பக்கம் பூட்டாமல் அங்கேயே தூங்கியுள்ளார். கலாவதி நேற்றுஅதிகாலை முழித்து பார்த்த போது, வீட்டின் கீழே உள்ள பீரோவிலிருந்து 45 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், மாடி டிராயரிலிருந்த 20 பவுன் நகைகளையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கலாவதி மகன் பாலகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டின் பால்கனி வழியாக உள்ளே இறங்கி 65 பவுன் தங்கநகைகளை மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள், தடயவில் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். சம்பவம் குறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடு போன 65 பவுன் நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
