`நடிகை கடத்தல் வழக்கில் திலீப்புக்கு தொடர்பில்லை’- பரபரப்பை கிளப்பும் சிறைத்துறை முன்னாள் டிஜிபி.

நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பை சேர்த்ததற்குப் பின், பெரும் சதி நடந்திருக்கும் என சந்தேகிப்பதாக, கேரள சிறைத்துறை முன்னாள் டிஜிபி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்த பிரபல நடிகையை 2017 பிப்ரவரி 17-ம் தேதி சிலர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கு தொடர்பாக பல்சர் சுனி உட்பட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இது தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் திலீப்பின் நண்பரும் திரைப்பட இயக்குநருமான பாலசந்திரகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அதை அவர் பார்த்தது தெரியும் என்று பாலசந்திரகுமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
