விவசாயியின் கவனத்தை திசைத்திருப்பி ரூ.5 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை அருகே வல்லம் நடுத்தெருவை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் அமலநாதன் (62). விவசாயி. இவர் நேற்று மதியம் வல்லத்தில் தான் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார். பின்னர் தன்னுடைய சைக்கிளில் பணப்பையை மாட்டி புறப்பட்டார்.
அப்போது பின்னால் இருந்து ஒரு நபர் கீழே ரூ.100 பணம் கிடக்கிறது. உங்களுடையதா என்று கேட்டுள்ளார். இதனால் அமலநாதன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அந்த பணத்தை எடுத்துள்ளார். அப்போது அந்த மர்மநபர் அமலநாதன் சைக்கிளில் மாட்டியிருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு பைக்கில் வந்த மற்றொரு நபருடன் தப்பி சென்று விட்டார்.
பின்னர் திரும்பி வந்து அமலநாதன் பார்த்தபோது சைக்கிளில் மாட்டியிருந்த பணப்பையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் வல்லம் போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த வல்லம் டி.எஸ்.பி., பிருந்தா, இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. வங்கி அமைந்துள்ள பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகம் இருக்கும். அவ்வாறான பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
