இந்தியா
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துவதற்கு வழிவகை செய்பவர். இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தற்போது, தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வருகிற மே 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ராஜீவ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமனம் செய்து இருக்கிறது. இவர் வருகிற 15-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் 1984-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் பிரிவில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை நிறைவு செய்தவர். உயிரியல் மற்றும் சட்டம் ஆகிய 2 இளங்கலை பட்டங்களை பெற்றுள்ளார். பொதுக் கொள்கை மற்றும் நிலையான தன்மை என்ற துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.

கடந்த 2019-ம் ஆண்டு 2 வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான நிதித்துறை செயலாளரே மத்திய பட்ஜெட்டை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் மத்திய மனிதவள பிரிவிலும் ராஜீவ் குமார் பணியாற்றியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார். அதுமுதல் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த ராஜீவ் குமார், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
