குற்றம்
பெண்கள் விவகாரத்தில் சிக்கிய தம்பி.. மதுபோதையில் அடித்துக்கொன்ற அண்ணன்..!!
திருவாரூர் அருகே மதுபோதையில் தம்பியை கடப்பாரையால் குத்திக் கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் அருகே எண்கண் கிராமத்திலுள்ள சிவராமன் காலனி தெருவை சேர்ந்த தங்கராசு. இவருக்கு ஐயப்பன் ( வயது 26), அருண்குமார் (வயது22) என்ற இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்தமகன் ஐயப்பன் தனது தம்பி அருண்குமாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபோதையில் அருண்குமாரை கடப்பாரையால் குத்தி கொலை செய்துள்ளார். அருண்குமார் கோயமுத்தூரில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்ததுள்ளார்.இந்த நிலையில் மூன்று நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அருண்குமார் விடுமுறைக்காக ஊருக்கு வரும்போதெல்லாம் ஏதேனும் பெண்கள் விவகாரத்தில் சிக்கி கொண்டு அதன்மூலம் அவரது குடும்பத்திற்கு தொடர்ந்து பிரச்னைகள் வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே குடும்பத்தார் அருண்குமாரை கண்டித்துள்ளனர்.இந்த நிலையில் வீட்டில் இருந்த அருண்குமாரிடம் மது போதையில் இருந்த அவரது அண்ணன் ஐயப்பன், உன்னால் குடும்பத்திற்கு அடிக்கடி அவப்பெயர் ஏற்படுவதாகவும்,குடும்பத்தில் உள்ளவர்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டி உள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகே இருந்த கடப்பாரையை எடுத்து தம்பி அருண்குமாரை குத்தியுள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த அருண் குமாரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அருண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அருண்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுதொடர்பாக இவர்களது சகோதரி சித்ரா குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் குடவாசல் காவல்துறையினர் அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.மேலும் ஐயப்பன் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து குடவாசல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய சொந்த தம்பியையே அண்ணன் கொலை செய்த விவகாரம் எண்கண் கிராமத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.