கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை அகற்றக் கோரி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் போராட்டம்
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் ஒட்டர்கரட்டுபாளையம் பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீ கண்ணாடி மாரியம்மன் கோயில் நிலம் உள்ளதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறையினர், நம்பியூர் சார்பதிவாளருக்கு பத்திர பதிவு செய்ய ஆட்சேபனை தெரிவித்து உரிய அனுமதியின்றி எந்த பத்திர பதிவும் செய்யக்கூடாது என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது,
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதிய பத்திரங்கள் பதிவு செய்யவும், வேறு ஒருவருக்கு விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியவில்லை என கடந்த மூன்று ஆண்டுகளாக நம்பியூர் சார் பதிவாளர், மாவட்ட பதிவு அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நம்பியூர் தாசில்தார் ஆகியோரிடம் பல்வேறு முறை புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனை கண்டித்து வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இதனால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் பேனர் வைத்தனர்.
தகவலறிந்து வந்த நம்பியூர் காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியர் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசி ஒருவாரத்தில் இந்து சமய அறநிலையத் துறையினரிடமிருந்து தடையின்மை சான்று பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கலைந்து சென்றனர்,