தமிழ்நாட்டிற்கு எட்டு முறை வந்துள்ள பிரதமர் மோடி ஒருமுறை கூட தனது 10 ஆண்டு கால சாதனைகளைப் பற்றி சொல்லவே இல்லை – ஓசூர் பிரச்சாரத்தில் நடிகர் கரு பழனியப்பன் விமர்சனம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும், கே.கோபிநாத்-திற்கு ஆதரவாக பிரபல திரைப்பட நடிகர் கரு பழனியப்பன் பிரச்சாரம் செய்து, வாக்கு சேகரித்தார்.
ராம் நகர், அண்ணா சிலை முன்பு திறந்த வேனில் இருந்தபடியே பேசிய அவர்,
இந்த தேர்தல் யார் வெற்றி பெறப் போகிறார்கள்.. தோல்வி அடையப் போகிறார்கள்.. என்பதற்கான தேர்தல் அல்ல. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவது இந்தியா கூட்டணி தான். இதில் யார் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடிப்பது என்பதற்கான தேர்தல் தானே தவிர, யார் வெல்லப் போகிறார்கள் என்பது அல்ல.
இந்தியா கூட்டணியினர் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.
ஆனால், தமிழ்நாட்டிற்கு எட்டு முறை வந்துள்ள பிரதமர் மோடி ஒருமுறை கூட தனது பத்தாண்டு கால சாதனைகளைப் பற்றி சொல்லவே இல்லை.
ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இதயம் கனக்கிறது கண்ணீர் வருகிறது என்கிறார். தமிழ் எனக்கு உயிர் என்று கூறும் மோடி, தமிழ் மொழிக்கு என்ன செய்தார் என்று கேள்வி கேட்டால் அதற்கு பதிலே இல்லை.
எப்பொழுதும் அறிக்கை விடுவதும் கண்ணீர் விடுவதுமாக இருக்கிறார். எனவே நாம் செய்ய வேண்டியது வேண்டாம் மோடி என்பதுதான்.
தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களை உள்ள நிலையில், ஏழு நாட்களும் யார் தொலைபேசியை எடுத்துப் பேசினாலும், வணக்கம் தாமரை என்று சொல்ல வேண்டும் என பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.
ஆனால் எட்டாவது நாள், அடக்கம் தாமரை என சொல்ல வேண்டும். ஏனென்றால் ஏழு நாட்கள் வணக்கம் தாமரை என்றும்… எட்டாம் நாள் காரியம் செய்துவிட்டு, அடக்கம் தாமரை.. என்றும் சொல்ல வேண்டும்…. என்று அவர் பேசினார்.