தலைப்பு செய்திகள்
பட்ஜெட்டில் ஏமாற்றம்: அரசு மருத்துவர்கள் வேதனை.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கையை இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது என அரசு மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் எஸ்.பெருமாள் ‘காமதேனு’ இணையதளத்திடம் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, கரோனா தொற்று உச்சத்தில் இருந்ததையும், தற்போது தொற்று வெகுவாகக் குறைந்துள்ளதோடு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மீண்டும் வழக்கம் போல் தலைமைச் செயலகத்தில் நடப்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். முதல்வரின் வழிகாட்டுதலில் அரசு மருத்துவர்கள் அளித்துள்ள பங்களிப்பை யாருமே மறக்க முடியாது.
புதிய ஆட்சி அமைந்து 11 மாதங்கள் நிறைவடையும் நிலையிலும் கோரிக்கை நிறைவேறவில்லை என்ற வலியும், வருத்தமும் ஒவ்வொரு மருத்துவரிடமும் அதிகமாகவே இருக்கிறது. கரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த அரசு மருத்துவர்களையும், அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரையும் அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.
கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க அரசு வலியுறுத்தியது. அந்த நேரத்தில் தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு எனத் தெரிந்தும், அரசு மருத்துவர் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு பணி செய்தோம். கரோனா பேரிடரில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ராணுவ மரியாதை வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து இன்னமும் நிவாரணம் எதுவும் தரப்படவில்லை. மருத்துவர் விவேகானந்தன் மனைவி கண்ணீர் விட்டு அழுத பிறகும், முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும் அரசுப் பணி வழங்கப்படவில்லை. அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது அரசுக்கு மிகவும் எளிதான காரியமே. அதாவது அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. மருத்துவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நியாயமான ஊதியமும் அத்தியாவசியம் என்பதை அரசு புரிந்துகொள்ள மறுப்பதுதான் வேதனையாக உள்ளது” என்றார்.
மேலும், “அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கரோனா முதல் அலையின்போது, மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கும் முன்னரே அங்கு ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றினார்கள். ஆனால் இங்கோ மூன்றாவது அலை வரை அரசுக்கு உறுதுணையாக உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து வருவது வருத்தமளிக்கிறது. இது 18 ஆயிரம் அரசு மருத்துவர்களுக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும், சுகாதாரத் துறையில் தமிழகம் சாதனை புரிந்து வருவது குறித்து பெருமையாகப் பேசப்படுகிறது. கரவொலி எழுப்பப்படுகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அநீதி இழைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்களின் வேதனையைத் தீர்க்கும் வகையில், ஊக்குவிக்கும் வகையில், எந்த ஒரு அறிவிப்பும் சட்டப்பேரவையில் வெளியிடப்படவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
சுகாதாரத் துறையில் அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி, தமிழகத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக நிலைநிறுத்தி வருகிறோம். ஆனால் அதற்கான பங்களிப்பை வழங்கிவரும் அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க மறுக்கிறது. ‘இது மக்களுக்கான அரசு மட்டுமல்ல.மருத்துவர்களுக்கான அரசும்தான்’ எனத் தெரிவித்த முதல்வர், அரசு மருத்துவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடுத்த அரசாணைப்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்” என்று பெருமாள் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
