தலைப்பு செய்திகள்
சுமுக நிலையை உருவாக்க முயற்சிக்கும் சோனியா!

5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தித் தலைவர்களான ஜி-23 தலைவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பிவந்தனர். கட்சியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றால், சோனியா காந்தி குடும்பம் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று அக்குழுவின் முக்கியத் தலைவரான கபில் சிபல் கண்டிப்பாகக் கூறியிருந்தார். எனினும், ஒருங்கிணைந்த முடிவுகள் எடுப்பது, ஒத்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பது என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளுடன் ஜி-23 தலைவர்கள் தற்போது இயங்கிவருகின்றனர்.

இந்தச் சூழலில், ஜி-23 தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் கட்சித் தலைவர் சோனியா காந்தி. சில நாட்களுக்கு முன்னர் சோனியா – குலாம் நபி ஆசாத் சந்திப்பு நடந்த நிலையில், நேற்று அக்குழுவின் பிற முக்கியத் தலைவர்களான ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, விவேக் தன்கா ஆகியோர் நேற்று சோனியாவின் அழைப்பின்பேரில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா ஆகிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று அவர்கள் டெல்லியில் இல்லையென்பதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இனி இதுபோன்ற சந்திப்புகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

