தலைப்பு செய்திகள்
குற்றவாளிகள் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது: வந்துவிட்டது புதிய `காவல் உதவி’ செயலி.

தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட `காவல் உதவி’ புதிய செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களையும், தொழில்நுட்ப யுத்திகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் “காவல் உதவி” செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும்.


