தலைப்பு செய்திகள்
உக்ரைன் ராணுவத்தின் பதில் தாக்குதலால் ரஷ்யா ஆத்திரம்!

உக்ரைன் ராணுவத்தின் பதில் தாக்குதலால் ரஷ்யா ஆத்திரம்!: 3வது உலகப்போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு.. ஆயுத உதவிகளை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு மிரட்டல்..!!
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மூன்றாவது உலகப்போர் தொடங்கிவிட்டதாக அறிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கிய ரஷ்யா, முக்கிய நகரங்கள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் அவ்வப்போது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் கருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் அதிநவீன போர் கப்பலான மாஸ்க்குவா என்ற போர் கப்பலை உக்ரைன் ராணுவம் ஏவுகணை வீசி தகர்த்தது. இதில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்களை உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்புத்துறை, நெப்டியூன் என்ற 2 ஏவுகணைகளை கொண்டு ரஷ்ய கப்பல் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக கூறியிருந்தது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த ரஷ்யா, தீ விபத்து காரணமாகவே மாஸ்க்குவா போர் கப்பல் மூழ்கிவிட்டதாக கூறியிருந்தது. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தினர் ரஷ்ய எல்லை நகரமான பிராயன்ஸ் நகர் மீது நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. உக்ரைன் ராணுவத்தின் அடுத்தடுத்த பதில் தாக்குதல்கள் ரஷ்ய அரசை கோபமடைய செய்துள்ளது.
மாஸ்க்குவா போர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதன் மூலம் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக ரஷ்யாவின் அதிகாரபூர்வ ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவிற்கு உலக தலைவர்கள் வந்து செல்வதை ஒரு குண்டுவீச்சின் மூலம் தடுத்துவிட முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் சார்பில், அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கான ஆயுத உதவியை நிறுத்த தவறினால் யாருமே எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யா பகிரங்கமாக மிரட்டியிருக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
