அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 21-ல் இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. பிரிட்டன் பிரதமர் எனும் முறையில் முதன்முறையாக அவர் இந்தியா வருவதும் கவனிக்கத்தக்கது. இதுதொடர்பாக போரிஸ் ஜான்சனின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இந்தச் சந்திப்பின்போது பிரிட்டன் பிரதமரும் இந்தியப் பிரதமரும் ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக, “சர்வாதிகார அரசுகளிடமிருந்து நமது அமைதிக்கும் வளத்துக்கும் அச்சுறுத்தல் எழுந்திருக்கும் நிலையில், ஜனநாயக சக்திகளும் நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்” என போரிஸ் ஜான்சன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
உக்ரைன் போர் தொடர்பாக இரு நாடுகளும் எதிரெதிரான பார்வையைக் கொண்டுள்ளன. ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கும் பிரிட்டன், போரில் ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியிருக்கிறது. மறுபுறம் இந்தியாவோ இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. தவிர, ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வாக்களிக்கவில்லை.