தலைப்பு செய்திகள்
இந்தியர்களை மீட்டு வரச் சென்ற விமானம் உக்ரைனுக்குள் செல்ல முடியாமல் மீண்டும் டெல்லி திரும்பியது.
உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. இந்த போர் எதிரொலியாக இந்தியர்களை மீட்டு வர உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் உக்ரைனுக்குள் செல்ல முடியாமல், நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் டெல்லி திரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், போர் தொடங்கியதால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. இந்திய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியதால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரம் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் 20 ஆயிரம் பேர் உக்ரைனில் வசித்து வருகின்றனர். தற்போது, ரஷ்யா தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருவதால் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நிலவுவதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. இதனிடையே உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி அவரச ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, உக்ரைனில் போர் எழும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்குள்ள இந்தியர்கள், கல்வி பயிலும் மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அடங்கிய சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்பதற்கு மாநில அரசு அவசர உதவி மையங்களை ஏற்படுத்தியுள்ளது. 044-28515288, 9600023645 அல்லது 9940256444 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். https://nrtamils.tn.gov.in என்ற வலைத்தளத்தில் தங்களது விவரங்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.