தலைப்பு செய்திகள்
சின்ன வெங்காயத்திற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மத்திய அரசு பெரிய வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்வதுபோல், சின்ன வெங்காயத்திற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் நேற்று (பிப்.26) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “பெரம்பலூர் சர்க்கரை ஆலை அடிக்கடி பழுது ஏற்பட்டு எந்திரங்கள் சரிவர இயங்கவில்லை. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆகவே, பழுதின்றி ஆலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் நுகர்வோர் நலத்துறை மூலம் பெரிய வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 21-க்கு கொள்முதல் செய்து, மொத்த விற்பனையாளர்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனை செய்துள்ளது.
இதேபோல், சின்ன வெங்காயத்தையும் மத்திய அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக புதிய பேருந்து நிலையத்தில் உழவர் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து சங்க கொடி ஏற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.