தலைப்பு செய்திகள்
கட்சியை சீரமைக்க காங்கிரசுக்கு கி.வீரமணி யோசனை!

“காங்கிரஸ் கட்சி தனது அடிக்கட்டுமானத்தையே மாற்றி புதுப்பிக்க வேண்டியது அதன் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற்று முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளின்படி, பஞ்சாப் ஒன்றைத் தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க. மறுபடியும் ஆட்சி அமைக்கும் வண்ணம் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் மற்ற மாநிலங்களைவிட உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேர்தல்களில்தான் பா.ஜ.க. மிகவும் அதிகமாக கவனம் செலுத்தியது. அதன்படி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள அதே சமயத்தில், முக்கிய எதிர்க்கட்சியாக அகிலேஷ் யாதவ் அவர்களின் சமாஜ்வாடி கட்சி 2017 ஆம் ஆண்டு பெற்ற இடங்களைவிட இரண்டு மடங்கு அதிக இடங்களைத் தற்போது பெற்றுள்ளது.

பஞ்சாபில் பா.ஜ.க. பெற்ற தோல்வி, எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வெற்றியால், காங்கிரஸ் தன்னிடமிருந்த ஆட்சியை இழந்துள்ளது. மோடி தலைமைக்கான செல்வாக்கு என்பது ஆம் ஆத்மி வெற்றியின்மூலம் பஞ்சாபில் பிரதிபலிக்கவில்லை என்றே கொள்ளப்படும். மணிப்பூரில் அறுதிப் பெரும்பான்மைக் கிட்டாததால், ஒரு சுயேச்சையை இணைத்துதான் பா.ஜ.க. ஆட்சி அமைத்திடும் நிலை.

உத்தராகண்ட்டில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார். உ.பி.யில் காங்கிரசின் தோல்வி, செல்வி மாயாவதியின் பகுஜன் கட்சி தோல்வி – இரண்டும் அதிர்ச்சிக்குரிய தோல்விகளாகும்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக தேர்தலுக்கு முன்பே உட்கட்சி பிரச்சினையால் பலவீனப்பட்டது நாடறிந்த உண்மையாகும். கோவாவில் அதற்கு இருந்த வாய்ப்பும் பறிபோனது. காங்கிரஸ் கட்சி தனது அடிக்கட்டுமானத்தையே மாற்றி புதுப்பிக்க வேண்டியது அதன் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது. காங்கிரசை பலவீனப்படுத்திட உள்ளும் புறமும் பல சக்திகள் வேலை செய்தன. பா.ஜ.க. பெற்ற வெற்றி தற்காலிகம்தான் என்று நிரூபிக்கவேண்டிய அளவுக்கு காங்கிரஸ் தலைமை சரியாக ஆய்வு செய்து, அதற்குக் கிடைத்துள்ள தொடர் தோல்விகளை அதிர்ச்சி வைத்தியமாகவே எடுத்து மீள திட்டமிடவேண்டும். காங்கிரசிற்கு ஆதரவு பல மாநிலங்களில் இருந்தும், அதை சரியாகத் திரட்டும் பயிற்சி பெற்ற இயந்திரம் இல்லை; தலைவர்களின் தன்முனைப்பு கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது என்பது எளிதில் எவருக்கும் புரியக்கூடிய ஒன்று.
மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம், பாதுகாக் கப்படவேண்டிய அரசமைப்புச் சட்ட ரீதியான பல வாழ்வாதார உரிமைகள், மாநில உரிமைகள், பன்முக கலாச்சாரம், இவற்றைப் பாதுகாக்கும் கண்ணோட்டத்தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வெற்றிகள் – நாட்டின் ஜனநாயகக் கட்டுக்கோப்புக்கும், அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் விடுக்கும் கேள்விக் குறிகளே என்பதை நன்கு புரிந்து, இந்தத் தோல்விகளிலிருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுத் தங்களது பார்வையை, அணுகுமுறையை மாற்றும் புதிய சிந்தனைக்குத் தயாராக வேண்டிய எச்சரிக்கை மணியே பா.ஜ.க. பெற்ற இந்த வெற்றிகள்.

இந்தத் தோல்வி முடிவுகளைப் பாடமாகக்கொண்டு எதிர்க்கட்சியினர் வலுவான கூட்டணி, சமூகநீதி, மாநில உரிமைகள், ஜனநாயகப் பாதுகாப்பு, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் காப்பு அடிப்படையில் ஓரணியை கட்டிடட தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி, அது எப்படி சமூகநீதியை உள்ளடக்கிய பொருளாதார, மாநில உரிமைகள், பன்முக கலாச்சாரப் பாதுகாப்பு என்பதை மய்யப்படுத்தினால், இன்னும் 2 ஆண்டுகாலத்தில் சாதித்துக் காட்ட முடியும். வீழ்வது முக்கியமல்ல; விரைந்து எழுவதுதான் மிக முக்கியம்! எதிர்க்கட்சிகளின் வலுவான ஒற்றுமை அதிகம் தேவை! அரசியலில் எதுவும் நிரந்தரமான நிலை இல்லை என்பதை எண்ணி, தோல்வி அடைந்தவர்கள், வெற்றி பெற்றவர்களும் தத்தம் நிலைப்பாட்டை ஆராய ஒரு வாய்ப்புதான் தேர்தல் என்பதை உணரவேண்டும். மக்களிடம் உண்மையான இறையாண்மை முடிவுகள் உள்ளன என்ற பாடம் முக்கியமானது” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
