தலைப்பு செய்திகள்
இந்தோனேஷியா,பிலிப்பைன்ஸ், மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – குலுங்கிய கட்டிடங்கள்.
இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. மலேசியா கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதே போல பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதே இதற்கு காரணமாகும். கடந்த ஆண்டு ஜனவரியில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மேற்கு சுலவாசி மகாணத்தில் 105 பேர் இறந்தனர். 6,500 பேர் காயமடைந்திருந்தனர். மேலும் கடந்த 2004ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தான் சுனாமி உருவானதாக கூறப்படுகிறது. அப்போதைய சுனாமியின் போது இந்தியா உள்பட 12 நாடுகளில் பல்வேறு இடங்களில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இதனிடையே சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் இன்று அதிகாலை 4.06 மணிக்கு கடல் மட்டத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது இந்தோனேஷியாவின் மையப்பகுதி கடலோர நகரமான பரியாமனுக்கு மேற்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும், அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான படாங்கிலிருந்து 167 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாகவும், அதனால் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அதிர்ந்ததால் மக்கள் வீட்டைவிட்டு பதற்றத்துடன் வெளியேறியதாகவும் முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 பதிவானது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அதே போல, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
மணிலாவிலிருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து ஏதும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கக் கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் முதலில் கூறியது, ஆனால் அது பின்னர் உடனடியாக எச்சரிக்கையை நீக்கியது. இந்தோனேசியாவில் நில தட்டுகளின் அசைவு காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.