BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தினகரன் ரீ என்ட்ரி. சுறுசுறுப்பில் தொண்டர்கள்.

கடந்த பல மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீண்டும் இயல்புக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறார். அதனை வெளிப்படுத்தும் வகையில் மேகேதாட்டு அணை விவகாரத்தை வைத்து இன்று திருச்சியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

இந்திய அரசியலமைப்புக்கு விரோதமாக மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகே தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது. இதில் பேசிய தினகரன், “கர்நாடக அரசு மக்களிடம் பிரிவினையை உருவாக்கி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறது. கர்நாடக மக்களை நாம் சகோதரர்களாக பார்க்கிறோம். கர்நாடக அரசு நம்மை பாகிஸ்தானியர்களாக நினைக்கிறது” என்று கூறினார்.

தேர்தல் தோல்விகள் மூலம் துவண்டு கிடந்த அமமுக தொண்டர்களிடம் இந்த ஆர்ப்பாட்டம் கொஞ்சம் சுறுசுறுப்பை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தவும் தினகரன் திட்டமிட்டிருக்கிறார். எதிர்வரும் 18-ம் தேதி முதல் இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. மண்டல பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் தினகரன் தலைமையில் இரண்டாவது கட்ட ஆய்வு கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமமுகவை மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார் தினகரன்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )