தலைப்பு செய்திகள்
`ஆன்லைனில் பிஇ முதலாமாண்டு தேர்வை நடத்த வேண்டும்’

“நேரடி பருவத் தேர்விற்கு தயாராவதற்குத் தேவையான கால அவகாசம் மாணவ, மாணவியருக்கு இல்லாத நிலையில், பொறியியல் பயிலும் மாணவ, மாணவியரின் முதல் பருவத் தேர்வினை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கவும், தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,”2021-ம் ஆண்டு இறுதியில் கரோனா மூன்றாவது அலை காரணமாக முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிலையில், அந்த மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வினை இந்த மாதம் 21-ம் தேதி முதல் நேரடியாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பது கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான கல்லூரிகளில் முதல் பருவத்திற்கான நேரடி வகுப்புகள் 60 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டதாகவும், நவம்பர் மூன்றாவது வாரத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் அனைத்து மாணவர்களும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக படிக்க வற்புறுத்தப்பட்டதாகவும், பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உடனடியாக முதல் பருவத் தேர்விற்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டடதாகவும் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா விழிப்பு மையமாக செயல்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் நிலைமை இதைவிட மோசமானது என்றும், அவர்களுக்கு 40 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
