திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 55 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கீழ புது தெருவை சேர்ந்த பாலாஜி(27). இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைங்கரியம் செய்து வருகிறார்.

இவருக்கு சொந்தமாக திருச்செந்தூர் அருகே ராமசாமிபுரத்தில் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7-00 மணிக்கு ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து நேற்று காலை சுமார் 6-00 மணி அளவில் ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஒரே நாளில் மொத்தமாக மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
