தேர்தலுக்காக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களில் படையெடுத்து வருகின்றனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகளே சம்பந்தப்பட்ட ரயிலில் ஏற முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருப்பதால் ரயிலை தவற விடுகின்றனர்.
கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்குவது போன்று தேர்தலுக்காக சிறப்பு ரயில்கள் வட மாநிலங்களுக்கு இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாடாளுமன்ற பொது தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. அதேநேரம் வட மாநிலங்களில் நாடாளுமன்ற பொது தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் ,ஈரோடு ,சேலம் காட்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வட மாநில தொழிலாளர்கள் கூலிச் தொழிலாளர்களாக பல்லாயிரக்கணக்கான வர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வடமாநில ரயில்களில் கடந்த 2 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து வைத்துள்ளனர். அப்படி முன்பதிவு செய்து வைத்திருந்தாலும் குறிப்பாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு பெட்டி மற்றும் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் பயணிகள் உள்ளே ஏற முடியாத அளவுக்கு படிக்கட்டிலேயே தொங்கிக் கொண்டு நிற்கின்றனர்.
காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று புறப்படுகிறது . அந்த இரண்டு நிமிடங்களுக்குள் லக்கேஜ் மற்றும் பயணிகள் உள்ளே செல்ல முடியாமல் கடும் கூட்ட நெரிசலால் பயணிகள் ரயிலை தவறவிடும் பரிதாப நிலை உள்ளது.
குறிப்பாக முன்பதிவு பெட்டிகளிலும் சாதாரண டிக்கெட் பயணிகள் இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். டிக்கெட் பரிசோதகர்களும் எதையும் கண்டு கொள்வது இல்லை.
இதனால் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமின்றி பல்வேறு விஷயங்களுக்காக வட மாநிலங்களுக்கு செல்லும் தமிழக பயணிகளும் ரயிலில் ஏற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கோடை கால சிறப்பு ரயில்களை இயக்குவது போன்று வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.