பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நூற்பாலைகள், கல்லூரிகள், காகித ஆலைகள் என அதிகமான வருவாய் வரும் இந்த ஊராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார்.
இந்த ஊராட்சிக்கு சேர்ந்த ஊர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்படாத நிலையில் ஊராட்சி தலைவர் கண்ணன் கடந்த சில நாட்களாக ஊராட்சி அலுவலகத்தினை பூட்டிக் கொண்டு சாவியை யாரிடமும் தரமறுத்து வருகிறார்.
இதனால் கடந்த சில நாட்களாக ஊராட்சி செயலர்(கிளார்க்) ஜோதி அலுவலகத்தின் வெளியிலேயே அமர்ந்து வேலை செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி நூறுநாள் வேலை திட்டத்துக்கான பதிவுகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட குடிநீர் வரி, வீட்டுவரி ஆகியவையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றாவது வார்டு உறுப்பினர் மணிப்பிரியா கூறுகையில், எனது பகுதிகளான சுக்கமநாயக்கன்பட்டி, சமத்துவபுரம், விநாயகர்காலனி, மருதப்பநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் போதிய சுகாதாரம், தெருவிளக்கு வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி தலைவர் கண்ணனிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அலுவலகத்துக்கு போனால் ஊராட்சி அலுவலகமே பூட்டியுள்ளது.
ஊராட்சி செயலர் ஜோதியை பெண் என்று கூட பாராமல் தலைவர் கண்ணன் சாவியை தராததால் அவர் வெளியே அமர்ந்து வேலை செய்யும் நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்துள்ளோம் என மணிப்பிரியா தெரிவித்தார்.
முன்னதாக ஊராட்சி செயலர் ஜோதியிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் தாம் அரசுப்பணியாளர் என்பதால் எதுவும் கூற இயலாது என தெரிவித்தார். எனினும் ஊராட்சி செயலர் ஜோதி இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக புகார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே ஊராட்சி அலுவலகத்தையை பூட்டி ,சாவியை வைத்துக் கொண்டு அரசுப்பணியாளர்களையும், பொதுமக்களையும் உள்ளே விட மறுக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஊராட்சித் தலைவர் கண்ணன் மேல் ஒருவகை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.