மாவட்ட செய்திகள்
உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கோரி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் !

தென்காசியில் தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித் துறைகளில் காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி துறை பொறியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிகளை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித் துறைகளில் பணிபுரியும் உதவி பொறியாளர்களுக்கு கடந்த 2012ம் வருடத்திற்கு பின்னர் இதுநாள் வரை உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. நீர்வளத்துறையில் 537 பணியிடமும் பொதுப்பணித் துறையில் 252 பணியிடமுமாக மொத்தமுள்ள 789 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களும் தமிழகம் முழுவதும் 492 பதவி இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் மட்டும் சிற்றாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் 3 உபகோட்டங்கள் செயல்படுகின்றன. இதில் ஒரே ஒரு உதவி செயற்பொறியாளர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். மீதமுள்ள 2 பணியிடங்களும் கடந்த 10 வருட காலமாக காலியாகவே உள்ளன. மேலும் தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை, குண்டாறு அணை, இராமநதி அணை, கடனாநதி அணை, மற்றும் 460க்கும் மேற்பட்ட குளங்கள், 100க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகளும் பராமரிப்பில் இருந்து வருகின்றன. இவை அனைத்திலும் பராமரிப்பு பணி நடைபெற்று வருகின்றது. இவைகளை கண்காணிப்பதில் உதவி செயற்பொறியாளர்களுக்கு பெரும் பணிச்சுமை ஏற்பட்டு வருகிறது.
எனவே துறையில் 10 வருடங்களுக்கு மேலாக உதவி செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாகவும் தகுதிவாய்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை உதவிப் பொறியாளர்களை உதவி செயற்பொறியாளர் காலிப்பணியிடங்களில் நிரப்பக்கோரும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் துறைப் பொறியாளர்கள் மற்றும் பொறியாளர் சங்கத்துடன் உதவிப் பொறியாளர் சங்கம் சேப்பாக்கம், சென்னை இணைந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் 13.04.2022 முதல் 22.04.2022 வரை 10 நாட்கள் கருப்பு பட்டை அணிந்து பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தென்காசி நீர்வள ஆதார அமைப்பு, சிற்றாறு வடிநில உப கோட்ட உதவி பொறியாளர்களும் கருப்பு பட்டை அணிந்து பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
