மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ரூ.5 மதிப்பிலான சமையல் எண்ணை சாலையில் ஆறாக ஓடியது.



விருதுநகர் சேர்ந்தவர் முகமது அசான் அலி. மினி லாரி ஓட்டுநரான இவர், தென்காசியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவருடன் விருதுநகரில் இருந்து திருநெல்வேலிக்கு மினி லாரியில் சமையல் எண்ணெய் ஏற்றி கொண்டு வந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், மினி லாரியில் இருந்து சமையல் எண்ணை டின்கள் மற்றும் பாக்கெட்டுகள் உடைந்து சாலையில் சமையல் எண்ணை ஆறாக ஓடியது. இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மினி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் காயமடைந்த முகமது அசான் அலி, இசக்கிமுத்து ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
