மாவட்ட செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மாரியம்மன் கோவில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அமாவாசை தினத்தையடுத்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நோன்பு சாட்டப்பட்டு, அன்றிலிருந்து 17-வது நாளில் தேரோட்டம் நடைபெறும்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய 2ஆண்டுகள் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
பக்தர்கள் எதிர்பார்த்தபடி இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த 5-ந் தேதி நோன்பு சாட்டப்பட்டது. 12-ந் தேதி கம்பம் நடுதல் விழா நடந்தது. 15-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி தினசரி அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு மயில் வாகனத்தில் சுவாமி, அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை ஸ்ரீீ மகாசக்தி மாரியம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகலில் கோவில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அலுவலர்கள், மண்டகபடிதாரர்கள் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீீதர், செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன், யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேருக்கு முன்னால் தண்ணீர் லாரிகள் வரிசையாக ஊர்வலம் போன்று அணிவகுத்து சென்றன. அந்த லாரிகளில் இருந்து சாலைகளில், குளிர்ச்சிக்காக தண்ணீர் ஊற்றிச்செல்லப்பட்டது. தேரை பக்தர்கள் முன்னால் இருந்து இழுத்து சென்றனர். பின்னால் இருந்து பக்தர்கள் தேரை தள்ளி சென்றனர். தேரை திருப்பங்களில் திருப்புவதற்காக ஜே.சி.பி.வாகனமும் கொண்டு செல்லப்பட்டது. தேர் தளி சாலை, வடக்கு குட்டை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி, பொள்ளாச்சி சாலை வழியாக சென்றது. பின்னர் இரவு 9.45 மணிக்கு தேர்நிலைக்கு வந்து சேர்ந்தது.
தேரோட்டத்தைக்காண உடுமலை மற்றும் சுற்று வட்டார கிராமப்புறங்களைச்சேர்ந்தவர்கள் பிற்பகல் முதலே சாரை, சாரையாக வந்து, தேரோட்டம் நடைபெறும் சாலையோரங்களில் இடம்பிடித்து காத்திருந்து தேர் வந்ததும் வழிபட்டனர். சுட்டெரித்த வெயிலிலும் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, தேர் வந்ததும் தேரில் சுவாமியுடன் வந்த மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். பக்தர்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மொட்டைமாடிகளிலும் நின்று, தேர் வந்ததும் வழிபட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தேர்த்திருவிழாவில் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர் ஜெய ராம கிருஷ்ணன் மடத்துக்குளம் தொகுதி சி மகேந்திரன் எம்எல்ஏ உடுமலை நகர தலைவர் மத்தீன் உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலரான ஸ்ரீ சரவணா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் வி ராமகிருஷ்ணன் தொழில் வர்த்தக சபை தலைவர் அருண் கார்த்திக் யு கே பி முத்துக்குமாரசாமி யு கே பி காம்ப்ளக்ஸ் ஸ்ரீ டவர்ஸ் யு கே பி என் செவ்வேல் உடுமலை நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன் எஸ்ஆர் கே ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திக் சின்னசாமி பொது மேலாளர் ஆர் கே முத்து வி பி எஸ் பிரகாஷ் ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் கோவில் அறக்கட்டளை தலைவர் லோகநாதன் ரோட்டரி சங்கர் முன்னாள் தலைவர்கள் ஏ எல் சரவணகுமார் ஆர் ராதா கிருஷ்ணன் சுவாட் ரவிக்குமார் அருண் மற்றும் தேர் திருவிழாவில் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.