மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே களர்பட்டியில் வயலில் அறுவடை பணிகள் நடந்தபோது இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே களர்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் சம்பா அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள வயல்களில் அறுவடை பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறுவடை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில் களர்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் வயலில் புதுக்கோட்டை மாவட்டம் மாங்கொல்லை கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (30) என்பவர் தனது அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை பணிகளை மேற்கொண்டிருந்தார்.
திடீரென இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக கார்த்தி அறுவடை இயந்திரம் இயங்கி கொண்டிருக்கும் போது அதன் மேல் ஏறி பெல்ட்டை சரி செய்ய முயற்சி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சுழன்று கொண்டிருந்த பெல்டில் சிக்கி கழுத்து இறுக்கி இயந்திரத்தில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து, இயந்திரத்தை நிறுத்தி கார்த்திமீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கார்த்தியின் மனைவி சிவபாரதி திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஸ்ரீதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
