மாவட்ட செய்திகள்
திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கும்பலை காவல்துறையினர் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை.
திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கும்பலை காவல்துறையினர் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் – திருப்பூர் மாநகரில் உள்ள அனைத்து பின்னலாடை நிறுவனங்களிலும் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் ஏ ஜி பாபு பேட்டி.
திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் கடந்த 3ஆம் தேதி இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றதையடுத்து 4ஆம் தேதி காலை ஜெயக்குமார் அளித்த புகாரின் பெயரில் மாநகர காவல் ஆணையர் ஏ ஜி பாபு தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தினர். மூன்று கிலோ தங்கம் , வெள்ளி நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதாக ஜெயக்குமார் அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கடையில் இருந்த சிசிடிவி காட்சி மற்றும் திருப்பூர் ரயில் நிலையத்தில் கிடைத்த காட்சிகள் மூலம் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் பீகார் தப்பிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது . இதனையடுத்து ரயில்வே போலிசார் உதவியுடன் கொள்ளை கும்பல் ரயிலில் சென்றபோது நாக்பூர் அருகே வைத்து ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று திருப்பூர் அழைத்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்தப் ஆலம் , பத்ருல் , முகம்மது சுபான் , திலகஸ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 3.25 கிலோ தங்கம் , 28 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 15 லட்ச ருபாய் மாநகர காவல் துறையினரால் இன்று காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு திருப்பூர் அடகுக் கடையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்த பட்டதாகவும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொள்ளை கும்பல் துண்டித்துவிட்டதோடு மின்சாரத்தையும் துண்டித்துவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் கடையில் இருந்த ஓரு சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த காட்சிகளையும் அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை கும்பல் ரயில் மூலம் சென்னைக்கு சென்று அங்கிருந்து ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இருந்தது தெரியவந்தது. உடனடியாக இங்கிருந்து சென்னை போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து குற்றவாளிகளை பின்தொடர்ந்து சென்று நாக்பூரில் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர்கள் திருப்பூர் அழைத்து வரப்பட்ட சூழ்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். கொள்ளை சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனைத் தொடர்ந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்தது கொள்ளை கும்பலை விரைந்து பிடிக்க உதவியதாகவும் ரயில்வே போலீசார் மற்றும் மகாராஷ்டிர மாநில போலீசார் முழு ஒத்துழைப்பு கொடுத்ததும் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க உறுதுணையாக இருந்தது எனவும் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருப்பூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த முழு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் , முழு விவரங்களும் பெறப்பட்ட பின் அவர்கள் மீது ஏற்கனவே ஏதேனும் குற்ற வழக்கு இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார். மேலும் திருப்பூர் மாநகரின் பாதுகாப்பு கருதி 12 கோடி மதிப்பீட்டில் 442 இடங்களில் 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவர் எனவும் தெரிவித்தார். இந்த குற்ற சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினருக்கும் மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.