மாவட்ட செய்திகள்
ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெயரில் எட்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மயிலாடுதுறையில் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் ரயில்வே ஜங்ஷன் அடுத்து, மேலஒத்தசரகு தெருவில் வசித்து வரும் விஜயகுமார் மற்றும் வெற்றிச்செல்வி தம்பதியர் வீட்டு மாடி தளத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் குடியேறியுள்ளார். ஜீவன் வங்கியில் வேலை செய்து வருவதாகவும் பணிமாறுதல் காரணமாக மயிலாடுதுறை வந்துள்ளதாக கூறி, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.

தனக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நெருங்கிய பழக்கம் என்று கூறி, அவர் மூலமாக ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் அமைச்சரிடம் பேசி விட்டதாகவும் எட்டரை லட்சம் ரூபாய் கொடுத்தால் ஆசிரியர் பணி வாங்கி விடலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி வெற்றிச்செல்வி தனது நகைகளை விற்றும், கடன் வாங்கியும் எட்டரை லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்துள்ளார்.
திருச்சியில் உள்ள அமைச்சரின் உதவியாளரை சந்தித்து பணத்தை கொடுத்து வேலைக்கான நியமன கடிதத்தை வாங்கி வரலாம் என்று கூறி வெற்றிச்செல்வி கணவர் விஜயகுமாரை பணத்துடன் திருச்சி அழைத்துச் சென்றுள்ளார். அமைச்சரின் உதவியாளரை சந்திக்க ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்று கூறி பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

பணத்தை எடுத்து சென்று வெகுநேரமாகியும் முருகன் திரும்பாததால் விஜயகுமார் அதிர்ச்சி அடைந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாவின் உத்தரவின் பேரில் இசை இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பதுங்கியிருந்த முருகனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் தமிழகம் முழுவதும் இதுபோல் பல நபர்களை முருகன் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
