BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

குமரி- நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில் 3வது பாதை மிகவும் அவசியம் இட நெருக்கடி பிரச்சினை தீர்க்க கோரிக்கை.


கன்னியாகுமரி- நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில், காலி ரயில் பெட்டிகளை கொண்டு செல்ல வசதியாக மூன்றாவது ரயில்பாதை அமைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மொத்தம் 17 கிலோ மீட்டர் மட்டுமே தொலைவு என்பதால் இதன் அவசியம் கருதி, இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து குமரிமாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் கூறுகையில், “கன்னியாகுமரியிலிருந்து தற்போது சென்னை, புனே, பெங்களூருக்கு தினசரி ரயில்களும், புதுச்சேரி, ஹவுரா, திப்ருகர் ஆகிய இடங்களுக்கு வாராந்திர ரயில்களும், டெல்லிக்கு வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலும், ராமேஸ்வரத்திற்கு மூன்று நாள் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் அங்கு பராமரிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் நீண்ட தூரம் இயங்கும் ரயில்களில் திருக்குறள், கத்ரா, ஹவுரா, புனே, திப்ருகர் ஆகிய ரயில்களின் காலி பெட்டிகள் பராமரிப்பு பணிக்கான 17 கி.மீ தொலைவில் உள்ள நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இதுபோக கன்னியாகுமரி – புனே ஜெயந்தி ஜனதா ரயில் தினசரி காலிப்பெட்டிகள் நாகர்கோவிலுக்கு வர இருக்கிறது. மீதமுள்ள ரயில்களான சென்னை, புதுச்சேரி , பெங்களூரு, ராமேஸ்வரம் ஆகிய ரயில்களுக்கும் எந்த விட பிட்லைன் பராமரிப்பும் கன்னியாகுமரியில் செய்வது இல்லை. நாகர்கோவிலுக்கு இவ்வாறு வரும் காலி ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் நாகர்கோவிலிருந்து காலி பெட்டிகளாக கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படும்.

 


காலி பெட்டிகளை கொண்டு செல்வதை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இருவழிப்பாதை திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பிட் லைன் வசதி அமைக்க திட்டமிடப்பட்டது. இந்திய அளவில் ரயில்வே வாரியத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய விதியின்படி கன்னியாகுமரியில் பிட் லைன் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. குமரி ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள காரணத்தால் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கொண்ட பிட் லைன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றால் கட்டுப்பாட்டு அறை, பணியாளர் வீடுகள் போன்றவை அமைக்க கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரயில் நிலையம் வளைவுகளுடன் கூடிய இருப்புபாதைகள் மற்றும் தற்போது உயரம் கூடிய நிலப்பரப்பில் உள்ளதாகவும் நிராகரிப்பிற்கு காரணம் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து காலிப் பெட்டிகளை உடனடியாக நாகர்கோவிலுக்கு கொண்டு வரமுடியாது. இந்த பாதையில் கால அட்டவணை படி இயக்கப்படும் ரயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த ரயில்கள் கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து சென்ற பிறகு ரயில்கள் இல்லாத நேரம் பார்த்துதான் இந்த காலி பெட்டிகளை நாகர்கோவிலுக்கு கொண்டு வரமுடியும். இதேபோல் மறுமார்க்கமாக பிட்லைன் பராமரிப்பு முடிந்த ரயில் பெட்டியை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்வதற்கு காலஅட்டவணைப்படி ரயில்கள் இல்லாத நேரம் பார்த்துதான் கன்னியாகுமரிக்கு கொண்டு செல்ல முடியும். இதனால் நாகர்கோவில் -கன்னியாகுமரி பாதையில் ஓர் நெடுந்தூர ரயில் இயக்கப்பட்டால் மொத்தம் இரண்டு தடவை காலி பெட்டிகளும், இரண்டு தடவை காலஅட்டவணை ரயிலாகவும் இயக்குவதால் நெருக்கடி நிறைந்ததாக செயற்கையாக உருவாக்கப்படுகிறது.

தற்போது நாகர்கோவில் – மதுரை மற்றும் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இருவழிப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் கன்னியாகுமரியிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை போன்ற இடங்களில் இருந்து இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்படலாம். இவ்வாறு ரயில்கள் இயக்கப்பட்டால் இடநெருக்கடி பிரச்சினை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தை வெகுவாக பாதிக்கும்.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு காலி ரயில் பெட்டிகளை கொண்டு வருவதற்கு என தனியாக பிரத்யேக இருப்புப் பாதை அதாவது மூன்றாவது பாதையை கன்னியாகுமரி – நாகர்கோவில் இடையே உள்ள 17 கி.மீ தூரத்துக்கு அமைக்க வேண்டும். அப்போதுதான் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்போது சிக்கல் இன்றி இருக்கும்’’ என்றார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )