மாவட்ட செய்திகள்
ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவியை மதிமுக கைப்பற்றுமா?
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது, திமுக உறுப்பினர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுப்பினர்கள் சிலரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் தேர்தல் ஆணையம் சார்பில் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தேர்தல் கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிக்கையில், “ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்களின் கூட்டம் 23.03.2022 அன்று 9:30 மணிக்கு நடைபெறும். தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களின்படி இப்பதவி ஒதுக்கீடு செய்யப்படவில்லை . எனவே , இப்பதவியிடத்திற்கு அனைத்து பிரிவினரும் போட்டியிடலாம்.
நகராட்சிகள் மற்றும் 2006- ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள் . மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின், விதி 98 , 99-ன்படி இக்கூட்டம் நடத்தப்படும் . இக்கூட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக கட்டடத்தில் நடைபெறும் . தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து வார்டு உறுப்பினர்களும் கோரப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.
பேரூராட்சி செயல் அலுவலரின் இந்த அறிவிப்பின் மூலம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுவது உறுதியாகி உள்ளது. திமுக கூட்டணியில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவி இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.