மாவட்ட செய்திகள்
பலத்த காற்றால் சாயும் வாழை மரங்கள்.

பலத்த காற்றினால் வாழைமரங்கள் சாய்வது தவிர்க்க வரப்பில் அகத்தி உட்பட காற்று தடுப்புக்கான மரங்களை நட்டு பராமரிக்கலாம் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனம் வாயிலாக ஒவ்வொரு சீசனிலும் சராசரியாக 2400 ஏக்கர் வரை தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக நாட்கள் நீடிப்பு மற்றும் பிஏபி பாசனத்தில் தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து குடிமங்கலம் வட்டாரத்தில் வாழை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு பொட்டிய நாயக்கனூர் மூங்கில்தொழுவு வீதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இலை வாழை மற்றும் நேந்திரன் கதலி உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
வழக்கமாக இப்பகுதியில் ஏப்ரல் மாதத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவே மார்ச் மாதத்திலேயே அறுவடை செய்யும் வகையில் திட்டமிட்டு வாழை கன்று நடவு செய்தனர் வாழைத்தார்களும் அறுவடைக்குத் தயாராக வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் உடன் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா கூறியதாவது குடிமங்கலம் வட்டாரத்தில் பலத்த காற்றினால் வாழைபாதிக்கப்பட்டது குறித்து நேரடி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது சாகுபடியை துவக்கும் முன் விளை நிலங்களில் வரப்புகளில் அகத்தி சவுக்கு உள்ளிட்ட காற்று தடுப்புக்கான மரங்களை நடவு செய்து பராமரிக்கலாம்.
மேலும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும்போது வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளைச் செய்தால் பாதிப்பை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
