மாவட்ட செய்திகள்
`இனி அச்சமின்றி செயல்படுவோம்’
கரூர் மாவட்டம், தோகமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களை முறையாக முடிவெட்டிக் கொண்டு வருமாறு கண்டித்த அப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமாரை, தங்கள் ஊரில் இருந்து சிலரை அழைத்துக் கொண்டு வந்து மாணவர்கள் மிரட்டினர். இதனால் அச்சமடைந்த அப் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு அவர்களின் மேல் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தை ஆசிரியர் சங்கங்கள் கையிலெடுத்தன. இதனை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்த அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரை நேற்று மாலை சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அப்போது அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்திருக்கிறார்.
அதனையடுத்து அனைத்து ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக. `இனி அச்சமின்றி செயல்படுவோம்’ என்ற தலைப்பில் ஆட்சியரை சந்தித்தபோது என்ன நடந்தது என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.