BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அமைச்சர் ராஜகண்ணப்பனை பதவி நீக்குக: மநீம வலியுறுத்தல்.

அமைச்சர் ராஜகண்ணப்பனை பதவி நீக்குக: மநீம வலியுறுத்தல்

சமூக நீதிப்பாடம் மக்களுக்கு மட்டும்தானா? அமைச்சருக்கு இல்லையா? முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதியைச் சொல்லித் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்துவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அவர்களை, போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் பட்டியல் இனத்தவன் என்று பலமுறை கூறி, அவர்மீது சாதிய ரீதியிலான தாக்குதலும், பல முறை அவரை ஒருமையில் பேசி அதிகாரத்தை துஷ்பிரயோகமும் செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

அதிமுகவின் சேர்மன் பேச்சைத்தான் அவர் கேட்பார் என்றும், அமைச்சர் சொல்வதை அவர் கேட்பதில்லை என்று சொல்லி ’நீ எஸ்சி பிடிஓ தானே’’ என்றும், ‘உன்ன இன்னைக்கே வேற இடத்துக்கு தூக்கி அடிக்கிறேன்’ என்று தன் சாதிய வெறியையும், அதிகார பலத்தையும் காட்டியுள்ளதாக ராஜேந்திரன் அவர்கள் புகார் சொல்கிறார்.

ஒரு பக்கம் சமூக நீதி காக்க முதலமைச்சர் ஸ்டாலின் குழு அமைக்கிறார். சாதி மதம் கடந்தது எங்கள் திராவிட மாடல் என்று பெருமையாக பேசுகிறார். ஆனால், அவர் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து, இது உண்மை எனும் பட்சத்தில் போக்குவரத்துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதுவே சமூகநீதியை காப்பதாய் முதல்வர் கூறும் செய்தியை உண்மையாக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கருதுகிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘என்ற கலைஞருக்கு பிடித்த வள்ளுவனின் வரிகளை முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகிறது மக்கள் நீதி மய்யம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )