மாவட்ட செய்திகள்
உடுமலை நகரில் 300 டன் குப்பைகள் அகற்றம்:நகராட்சி அதிரடி.

உடுமலை நகரில் உள்ள 33 வார்டுகளிலும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின்படி மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு கணபதிபாளையம் குப்பைக் கிடங்கிற்கு அன்றாடம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பொதுமக்களால் கழிக்கப்படும் கழிவுகள் ரிசர்வ் சைட்டுகள், சாலையோரங்கள், முட்டுச் சந்துகள், ஒதுக்குப் புறமான ஆள் அரவமற்ற இடங்கள் என ஏராளமான இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் லட்சக்கணக்கான கொசுக்கள் தினமும் உற்பத்தி யாகி நகரில் சுகாதாரக் கேடுகள் உருவாகி வந்தன. மேலும் திருமண மண்டபங்கள், உணவங்களில் கழிக்கப்படும் கழிகளும் ஆங்காங்கே குவித்து வைக்கப்படும் சூழ்நிலைகளும் இருந்து வந்தன. இந்நிலையில் புதிதாக பொறுப்புக்கு வந்த நகராட்சி நிர்வாகம் தூய்மை நகரம் நம்ம உடுமலை என்கிற திட்டத்தின்படி மாஸ் க்ளீனிங் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது.

அதாவது மார்ச் 20 ம் தேதி முதல் ஒரு டிவிசனுக்கு ஒரு ஜேசிபி, ஒரு லாரி என 10 வாகனங்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் முட்புதர்களை அகற்றுதல், மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்றுதல், தெருக்களை தூய்மைப் படுத்துதல் என பணிகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டது. இப்படி அகற்றப்படும் கழிவுகள் கணபதிபாளையம் குப்பைக் கிடங்கு, மைவாடி பிரிவு கல்குவாரி, ரயில்வே மெகா குழிகள், லீலா கார்டன் என ஐந்து இடங்களில் கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உடுமலை நகரில் மட்டும் மொத்தம் 300 டன் குப்பைகள், கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இது குறித்து நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் கூறியது:
தூய்மை நகரம் நம்ம உடுமலை என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும் என்ற உறுதியோடு இந்த திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இதற்காக நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்போடு நேரம் காலம் பார்க்காமல் தினமும் பணியாற்றி வருகிறோம். பொது மக்களும் தூய்மை நகரம் திட்டத்திற்காக ஒத்துழைக்க வேண்டும். முற்றிலும் கொசுக்களை கட்டுப்படுத்தி சுகாதாரமான நகரமாக உடுமலை நகரம் விரைவில் மாற்றப்படும் என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
