வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர்

பேரணாம்பட்டு நகராட்சியில் வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர் மோகன் குமார்: கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா ?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் (வைப்பு தொகை) டெபாசிட் செலுத்தாமலேயே 3 ஆயிரம் ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஒரு சில நகரமன்ற உறுப்பினர்களும், ஒரு சில பெண் நகரமன்ற உறுப்பினர்களின் கணவர்களும் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழக அரசுக்கு சேர வேண்டிய பல லட்ச ரூபாய் வருமானம் கணக்கில் வராமல் மோசடி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நகராட்சி ஆணையராக சில தினங்களுக்கு முன்பு மோகன் குமார் என்பவர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் கே.கே. நகர் பகுதியில் டெபாசிட் கட்டாத ஒரு வீட்டுக்கு சில ஆயிரங்களை லஞ்சமாக பெற்றுக் கொண்டு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல நகராட்சி ஆணையர் மோகன்குமார் வருகைக்குப் பிறகு இதுபோன்ற தவறுகள் பேரணாம்பட்டு நகராட்சியில் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்த குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமானால் மாவட்ட அளவில் உள்ள நகராட்சி அதிகாரிகள் பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் நேரில் வந்து ஆய்வு செய்து குழாய் இணைப்புகள் எங்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளதோ ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும்.
இப்படியாக வாங்கிற சம்பளத்திற்கு உண்மையாக வேலை செய்யாமல் திருட்டுத்தனமாக குழாய் இணைப்புகள் வழங்குவதிலும், நகராட்சி குடிநீரை டிராக்டர்களில் எடுத்துச் சென்று திருமண வீடுகள், சுபவிஷேசங்கள் நடைபெறும் வீடுகள் போன்றவைகளுக்கு ஒரு லோடு 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு விற்பனை செய்து கல்லாகட்டும் ஆணையர் மோகன் குமார் மீதும், அதற்கு துணை போகும் பணி மேற்பார்வையாளர் தவமணி ஆகியோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது .
