அடமானம் பிடித்த வாகனத்தை வேறு இடத்தில் வைத்து பணம் பார்க்கும் மணப்புரம் நிறுவனம்!
அமானம் பிடித்த வாகனத்தை வேறு இடத்தில் வைத்து பணம் பார்க்கும் மணப்புரம் நிறுவனம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டம், வேலூர் தோட்டப்பாளையம், காட்பாடி சாலையில் அமைந்துள்ள மணப்புரம் கோல்டு லோன் மற்றும் நிதி நிறுவனத்தை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் முற்றுகையிட்டனர்.
புத்துக்கோயில் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர் சங்கர் என்பவர் அவரது லாரியை மணப்புரம் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
பின்னர் அந்த கடனுக்காக ரூ.11 லட்சமாக வட்டியுடன் செலுத்தி முடித்து 3 மாதங்கள் கடந்த நிலையில், அந்த உரிமையாளருக்கு ( என்.ஓ.சி )தடையில்லா சான்றை வழங்கியது நிறுவனம்.
இருந்தாலும் அந்த நிறுவனம் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் ஆர்.டி.ஓ. செயலியில் ஆன்லைன் மூலம் (என்.ஓ.சி)யை தடைசெய்துள்ளது.
ஆகவே நிதி நிறுவனத்தின் அராஜக போக்கை கண்டித்து வாகனம் மற்றும் தங்க நகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் முற்றுகை போராட்டமானது நடந்தது.
அப்போது மணப்புரம் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள் கடனாக பெற்ற தொகைக்கு வட்டியுடன் முழு தொகையை செலுத்தியும் இதுவரையில் 3 மாதங்களாகியும் தடையில்லா சான்றிதழை ஆன்லைனில் ஏற்றவில்லை.மேலும் இந்த லாரியை மணப்புரம் நிதி நிறுவனம் வேறு எங்காவது அடமானம் வைத்துள்ளனரா? என்ற சந்தேகத்தில் மணப்புரம் நிறுவனத்தின் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வேலூர் வடக்கு காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.மேலும் இந்த நிறுவனத்தில் அடமானம் வைக்கப்படும் வாகனங்கள் தங்க நகைகளை இந்த மணப்புரம் நிறுவனம் வேறு வங்கிகளில் அடமானம் வைத்து அவர்கள் பணம் பெற்றுக் கொள்வதாகவும் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.