அதிமுக சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
கடலூரில் அதிமுக நிர்வாகிகள் சமீபத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து கூலிப்படை தற்போது கொலை சம்பவங்களை அரங்கேற்றி வருவதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிமுக சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கடலூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகளவில் உள்ளதால் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
போதை பழக்கத்திற்கு ஆளான இளைஞர்கள் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டும் மேலும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த கூலிப்படையினருடன் கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
அதனால் போதை பழக்கத்தை அடியோடு தடுப்பதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிரிக்குப்பம், கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைத்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது