அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜா கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் தேர் திருவிழா
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் பழமை வாய்ந்த கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி விநாயகர் உற்சவம் நடந்தது. கடந்த 14ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் 7 ம் நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது.
தேரினை தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன் , கோயில் செயல் அலுவலர் வஜ்ரவேல் , எழுத்தர் விஜயகுமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் தக்கோலம் பேரூராட்சி துணைத்தலைவர் கோமளா ஜெயகாந்தன், வழக்கறிஞர் சுந்தர், பேரூராட்சி கவுன்சிலர்கள் கோபி, பாண்டியன், திமுக மகளிர் அணி சுதா மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் . கோயில் தேரோட்டம் தக்கோலத்தில் உள்ள நான்கு மாட வீதிகளில் நடைபெற்றது . பக்தர்கள் சிவநாதம் முழங்க மேளதாளங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது . மேலும் ஆங்காங்கே நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று திருக்கல்யாணமும், நாளை மாவடி சேவையும் நடைபெறுகிறது . 24ம் தேதி ரிஷப வாகனமும் 25ம் தேதி நால்வர் உற்சவம் நடைபெறுகிறது.