அரசியல்
கட்டு கட்டா பணம்.. லீக்கான வீடியோ.. கோவாவில் தேர்தலுக்கு முன்பே குதிரை பேரம்..? என்ன நடக்குது?
பனாஜி: கோவாவில் 3 காங்கிரஸ் வேட்பாளர்கள், ஒரு திரிணாமுல் வேட்பாளர் ஆகியோர் தேர்தலுக்கு பின் பாஜகவுக்கு செல்ல குதிரை பேரம் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவாவில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாளை இங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்கிறது. மாநிலத்தை ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ், புதிதாக கால்பதித்துள்ள ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதனால் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக பிரசார வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது. இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும், கோவாவில் புதிதாக ஆட்சி கட்டிலில் அமர ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் கோவா அரசியல் களம் சூடிபிடித்தது. நேற்று பகிரங்க பிரசாரம் முடிவடைந்தது.
குதிரை பேர வீடியோ இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெலிம் தொகுதி வேட்பாளர் சாவியோ டிசில்வா, நாவெலிம் தொகுதி அவர்டானோ புர்ட்டோ, மார்முகா தொகுதி சங்கல்ப் அமோன்கார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த பெனாலியம் தொகுதி எம்எல்ஏ சர்சில் அலிமோ ஆகியோர் குதிரை பேரத்தில் ஈடுபடும் வீடியோ வெளியானது. தேர்தலில் வெற்றி பெற்ற பின் தேவைப்பட்டால் பாஜகவுக்கு கட்சி மாறுவது, இதற்காக கோடிக்கணக்கில் பணம் பெறுவது, தொழில் வாய்ப்புகள் குறித்து அவர்கள் பேசும் வகையில் வீடியோ இருந்தது. கையும், களவுமாக சிக்கினர் இதனை கோவா ஆம்ஆத்மி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. மேலும் ‛‛தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் பாஜகவில் இணைய பணம் பெற்று கொள்வதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பேசி கையும், களவுமாக சிக்கியுள்ளனர்” என கூறியிருந்தனர்.
சித்தரிக்கப்பட்ட வீடியோ இதனை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛தேர்தலுக்கு 48 மணிநேரம் இருக்கும் நிலையில் போலியான வீடியோ மூலம் அவதூறு பரப்ப ஆம் ஆத்மி, பாஜக முயற்சிக்கிறது” என குறிப்பிட்டது. மேலும் காங்கிரஸ் செய்திக்குறிப்பில், ‛‛காங்கிரஸ், 3 கட்சி பிரமுகர்கள் குறித்து அவதூறு பரப்ப பாஜக-ஆம்ஆத்மி இணைந்து சதிச்செயலில் ஈடுபட்டுள்ளது. பிரசாரம் முடிந்து தேர்தலுக்கு 48 மணிநேரம் இருக்கும்போது தவறான நோக்கத்தில் ஹிந்து கபார் எனும் செய்தி சேனல் மூலம் சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயலாகும்.
தேர்தல் ஆணையம் விசாரணை மேலும் சுதந்திரமான, நியாயமான தேர்தலில் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடான்கர், பொது செயலாளர் சுனில் கவ்தான்கார் தைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து போலியான வீடியோ உருவாக்கியவர்கள், செய்தி சேனல் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க உள்ளனர்.” என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பாஜக, ஆம்ஆத்மிக்கு தொடர்பு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ஆம்ஆத்மிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். போலி வீடியோவை வெளியிட்டு ஆம்ஆத்மி கட்சி எங்கள் வேட்பாளர்களை தாக்குகிறது. இதுதொடர்பான செய்தி நிகழ்ச்சியில் பாஜக, ஆம்ஆத்மி மாநில தலைவர்கள் நேரடியாக பங்கேற்றனர். இதன்மூலம் இருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது உறுதியாக தெரிகிறது” என்றார்.