BREAKING NEWS

அரசியல்

திடீர் டிவிஸ்ட்.. சிதம்பரத்தில் திமுக கூட்டணியில் ஐக்கியமான தேமுதிக.. அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் கூத்து!

காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 வார்டுகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 வார்டும் ஒதுக்கப்பட்டன. மேலும் தேமுதிகவுக்கு ஒரு வார்டு ஒதுக்குவதாக திமுக அறிவித்தது.

சிதம்பரத்தில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து. அக்கட்சிக்கு வார்டு ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நடைபெறும். கட்சியில் சீட்டு கிடைக்காவிட்டால் சுயேட்சையாகப் போட்டியிடுவது, போட்டி வேட்பாளரை நிறுத்துவது, அணி மாறி போட்டியிடுவது, எதிர்க்கூட்டணியில் சேருவது என எல்லா விஷயங்களை அரசியல்வாதிகள் அரங்கேற்றிக் காட்டுவார்கள். அதுபோன்ற காட்சிகள் தற்போது அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக தலைமை அறிவித்திருந்தது. இதன்படி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. இந்நிலையில், கட்சி தலைமை முடிவுக்கு மாறாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர், பின்னர் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு சில பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

தேமுதிக நிர்வாகிகளின் பேச்சுவார்த்தையால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே புதுக்கோட்டையைப் போல, சிதம்பரம் நகரிலும் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிடும் காட்சி அரங்கேறியிருக்கிறது. சிதம்பரம் நகர திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று  நடைபெற்றது. திமுக நகர செயலாளர் கே.ஆர் செந்தில்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியின்  நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், இக்கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளும் பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இக்கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சியில் திமுக கூட்டணி போட்டியிடும் வார்டு விவரங்களை திமுக செயலாளர் அறிவித்தார். 

இதன்படி மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 25 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 வார்டுகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 வார்டும் ஒதுக்கப்பட்டன. திமுக கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சிக்கு ஒரு வார்டு ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு ஒரு வார்டு ஒதுக்குவதாக திமுக நகர செயலாளர் செந்தில்குமார் அறிவித்தார். இதனால். சிதம்பரம் நகராட்சியில் மட்டும் திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக கடலூர் தேமுதிக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பாலு கூறும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். எனவேதான் திமுக கூட்டணியை தேமுதிக ஆதரிக்கிறது. எங்கள் கட்சிக்கு ஒதுக்கிய வார்டில் நகர செயலாளர் பாலகிருஷ்ணனின் மனைவி குணசுந்தரி போட்டியிடுகிறார்” என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த தேமுதிகவினர், சிதம்பரத்தில் திமுகவுடன் கூட்டணி சேர்த்து அதிரடித்திருக்கிறார்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )