அரசியல்
அப்பா வழியில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு குறிவைத்து களமிறங்கும் அமைச்சரின் மகன்.. மனைவியும் போட்டி..!
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மனைவி சைதானி பீ 6வது வார்டிலும், மகன் மொக்தியாரை 7வது வார்டு வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள இவர், செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை குறிவைத்து உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மனைவி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசியலில் பரபரப்பு மிக்க பேரூராட்சியாக தற்போது செஞ்சி உள்ளது. இதில், 18 வார்டுகளை கொண்ட செஞ்சி பேரூராட்சியில் ஆண்கள் 11,497, பெண்கள் 12, 422 மற்றும் திருநங்கைகள் 20 பேர் என மொத்தமாக 23,939 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
செஞ்சி பேரூராட்சியை பொறுத்தவரை கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த 5 தேர்தலிலும் தி.மு.க. சார்பில் தற்போது அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 தேர்தலின் போது 9 வார்டுகளில் தி.மு.கவும், 7 வார்டுகளில் அ.தி.மு.கவும், 2 வார்டுகளில் தே.மு.தி.க.,வும் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது திமுக சார்பில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 17ம் தேதி செஞ்சி பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டு நேர்காணல் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் மற்றும் மனைவி சைதானி பி நேர்காணலில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மனைவி சைதானி பீ 6வது வார்டிலும், மகன் மொக்தியாரை 7வது வார்டு வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள இவர், செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை குறிவைத்து உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மொக்தியார் அலி, உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலே அவருக்கு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 5 முறை பேரூராட்சி தலைவராக அமைச்சர் மஸ்தான் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.