அரசியல்
ஆதாரத்த எடுத்துட்டோம்.. நட்டாஜி கிட்ட ரிப்போர்ட் கொடுக்க போறோம்.. திமுகவை அலறவிடும் விஜயசாந்தி.
அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினோம், மதமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தை திசை திருப்புவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் உள்ளே நுழைந்து ஆராய்ந்து பார்த்தால் அரசு சொல்வதற்கும் நடந்த சம்பவத்திற்கும் முரண்பாடுகள் இருக்கிறது.
அரியலூர் மாணவியை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிகள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும், அதை விரைவில்அறிக்கையாக பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் வழங்க உள்ளதாகவும் நடிகையும், முன்னாள் எம்பியுமான விஜயசாந்தி கூறியுள்ளார். மைக்கேல் பட்டி பள்ளியில் மதமாற்றம் செய்ய முயற்சி ஏதும் நடக்கவில்லை என தமிழக காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில் விஜயசாந்தியின் இக் கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுக்கு படித்து வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அம்மாணவி பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது, அந்த வீடியோவை முதன்முதலில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாணவியை மதம்மாறச் சொல்லி துன்புறுத்தல் நடந்துள்ளது அதனால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என புகார் முன் வைத்தார். பின்னர் அது காட்டுத்தீயாக பரவியது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் விரைந்து கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரத்தை ஆரம்ப முதலிலிருந்தே விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மாணவி விவகாரத்தை பாஜக உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறது. தமிழகத்தில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்று எச்சரித்து வந்தனர். இந்நிலையில் திடீரென அந்த மாணவி பேசிய முழு வீடியோ ஒன்று சில தினங்கள் கழித்து வெளியானது. அதில் அந்த மாணவி எந்த இடத்திலும் தான் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தப்பட்டதாக கூறவில்லை.கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டார் என்பதையும் அந்த மாணவி திட்டவட்டமாக மறுத்திருந்தார். செந்தூர் பொட்டு அழிக்க தன்னிடம் யாரும் ஒருபோதும் வற்புறுத்தவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார். ஆனால் தன்னால் சரியாக தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியவில்லை அந்த விரக்தியில் தான் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவே அவர் கூறியிருந்தார். அக மதமாற்றம் செய்ய சொல்லி அந்த மாணவியை எவரும் துன்புறுத்தவில்லை என்பது அதன் மூலம் தெளிவானது.
இந்நிலையில் திருகாட்டுபள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்பதை களத்திற்கு சென்று ஆராய்ந்து அறிக்கை வழங்க 4 மாநிலங்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். அதில் பாஜக எம்.பி சந்தியா ராவ், கட்சித் தலைவர்கள் விஜயசாந்தி, சித்தராவாக், கீதா விவேகானந்தா ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த குழு மாணவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்திற்கு வருகைதந்தனர். அங்கே மாணவியின் பெற்றோர்களுடன் சுமார் 1 மணிநேரம் அவர்கள் விசாரணை நடத்தினர். விஜய்சாந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவியை மதம் மாறு சொல்லி வற்புறுத்தி வந்த நிலையில்தான் அதற்கு சம்மதிக்காமல் அவர் தற்கொலை செய்துள்ளார். மொத்தத்தில் மாணவி கொடுமை படுத்தப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் அமைதியாக இருக்கிறார்? யாரைக் காப்பாற்ற அவர் முயற்சி செய்கிறார்? இந்த சம்பவத்தை திமுக அரசு திசைதிருப்ப முயற்சிக்கிறது என சரமாரியா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு விஜயசாந்தி பேட்டி கொடுத்துள்ளார். அதில் மதமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினோம், அவரது தந்தை மற்றும் சித்தியிடம் நீண்ட நேரம் பேசினோம், பலரும் மதமாற்றம் நடைபெறவில்லை என கூறிவருகின்றனர், ஆனால் நாங்கள் விசாரித்த வரையில் கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சி நடந்திருக்கிறது. அதாவது அந்த மாணவி பேசியதாக நான்கு வீடியோக்கள் வெளியாகி உள்ளது, அதில் ஒன்றில் அதற்கான ஆதாரம் உள்ளது. மதமாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதே உண்மை. உண்மை இருப்பதனால்தான் நாங்கள் வந்திருக்கிறோம், நான்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நட்டா ஜி அவர்கள் இங்கு விசாரணை நடந்த அனுப்பி வைத்திருக்கிறார். உண்மையில் என்ன நடந்தது என்று ஆராய சொல்லி அனுப்பி இருக்கிறார். சீரியசாக இதை விசாரிக்கவேண்டும் என அவர் கூறியிருக்கிறார். அதனால்தான் நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கிறோம். நேரில் ஆராய்ந்திருக்கிறோம். மணிக்கணக்கில் அவர்களது பெற்றோர்களும் பேசினோம்.
அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினோம், மதமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தை திசை திருப்புவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் உள்ளே நுழைந்து ஆராய்ந்து பார்த்தால் அரசு சொல்வதற்கும் நடந்த சம்பவத்திற்கும் முரண்பாடுகள் இருக்கிறது. மதமாற்றம் செய்ய முயற்சி நடந்தது என்பது உண்மைதான். ஆனால் இது வேறு வழியாக திசைதிருப்ப பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் சித்திக்கும் உறவு சரியில்லை என்றும், சித்திக்கும் அந்தப் பெண்ணுக்கும் புரிதல் உறவு சரியில்லை என்றால் அந்தப் பெண்ணை அவர் எப்படிப் படிக்க வைக்க முடியும். அந்தப் பெண் விடுதியிலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படாமல் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார். நீ வெளியே சென்றுவிட்டால், வெளியில் இதைப் பற்றிச் சொன்னால் மார்க் குறைத்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். நிறைய தகவல்களை அந்த பெண் வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்திருக்கிறார். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் குடும்பம் பிரச்சனை அல்ல, நிறைய ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது, இதை அறிக்கையாக நட்டாஜி இடம் வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.