அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார் பாஜக தலைவர் என கோவில்பட்டி அருகே துரை வைகோ பேட்டி
அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார் பாஜக தலைவர் என கோவில்பட்டி அருகே துரை வைகோ பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து புளியங்குளம், லட்சுமியம்மாள்புரம், இளையரசனேந்தல் வழியாக வரகனூருக்கு இயக்கப்பட்ட அரசு நகரப்பேருந்து சாலை செப்பினிடும் பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பான மக்களின் கோரிக்கையை துரை வைகோ சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேருந்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி கோவில்பட்டி முதல் வரகனூர் செல்லும் அரசு நகர பேருந்து இயக்க தொடக்க விழா இளையரசனேந்தலில் நடந்தது. மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமையில்,பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், கோவில்பட்டி போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ஜெகநாதன், மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விநாயகா ஜி.ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், இளையரனேந்தல் ஊராட்சி தலைவர் பவானி, துணை தலைவர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில் :
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்னர் பெட்ரோலுக்கு ரூ.9.50 டீசலுக்கு ரூ.3.50 கலால் வரி இருந்தது. இது படிப்படியாக பலமுறை பல மடங்கு உயர்த்தப்பட்டு கடந்த நவம்பர் மாதத்தில் பெட்ரோலுக்கு ரூ.32.90 டீசலுக்கு ரூ.31.80 என இருந்தது. கடந்த நவம்பர் மாதம் மற்றும் தற்போது கலால் வரி குறைப்பின் காரணமாக பெட்ரோலுக்கு ரூ.18.90, டீசலுக்கு ரூ.15.80 என கலால் வரி உள்ளது. மத்திய அரசு இன்னும் 2014-ம் ஆண்டு அளவுக்கு குறைக்கவில்லை.
500 ரூபாய் பொருளுக்கு ஆயிரம் ரூபாய் என ஸ்டிக்கர் ஒட்டி, அதற்கு 40 சதவீதம் தள்ளுபடி விற்பனை என விளம்பரப்படுத்தி அந்த பொருளை 600 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள். மக்களைப் பொருத்தவரை பாதி விலைக்கு விற்கிறது என வாங்குவார்கள். ஆனால் 500 ரூபாய் மதிப்பிலான பொருளை 600 ரூபாய்க்கு வாங்கி உள்ளீர்கள். அதேபோல்தான் கலால் வரி பொருத்தவரை 2014-ம் ஆண்டில் இருந்ததை விட பல மடங்கு உயர்த்தி விட்டு தற்போது சிறிதளவு குறைத்துள்ளனர்.
கலால் வரியில் நான்கு பிரிவு உள்ளது. இதில் அடிப்படை கலால் வரியில் மட்டும் தான் மாநில அரசுடன் ஒன்றிய அரசு பகிர்ந்து கொள்கிறது. மீதமுள்ள 3 பிரிவுகளில் வாங்கும் வரியை ஒன்றிய அரசு அப்படியே எடுத்துக் கொள்கிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு அடிப்படை கலால் வரியிலிருந்து 50 சதவீதம் மாநில அரசுக்கு பகிரப்பட்டு வந்தது. இது படிப்படியாக குறைந்து தற்போது 4 சதவீதமே வழங்கப்படுகிறது.
ஆனால், அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் மக்களை குழப்புவதற்காக அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார். தொடர்ந்து தமிழக அரசை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு தன் போக்கை மாற்றாவிட்டால், மக்களைத் திரட்டி கமலாலயத்துக்கு முன்பு காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்துவோம், என்றார் அவர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.