ஆடிக்கு வராமல் அமாவாசைக்கு வந்த காவிரி நீர் காவிரி நீரை தரையில் விழுந்து வணங்கி வரவேற்ற விவசாயிகள்
ஆடிக்கு வராமல் அமாவாசைக்கு வந்த காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்ட எல்லையை இரவு தொட்ட காவிரி நீரை தரையில் விழுந்து வணங்கி வரவேற்ற விவசாயிகள் சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி பொதுப்பணி துறையினர் மாவட்டத்திற்குள் திறந்து விட்டனர்:-
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் இயற்கையின் கருணையால், கர்நாடக அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி திருச்சி கல்லணை வந்த காவிரி நீர் டெல்டா மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்டது. ஆடிப்பெருக்கு கொண்டாட காவிரி கடலுடன் கலக்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தண்ணீர் வராத நிலையில் இந்த காவிரி நீரானது இரவு
கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் தண்ணீர் வந்தடைந்தது. காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்ட எல்லை அடைந்தவுடன் விவசாயிகள் தரையில் விழுந்து வணங்கி காவிரியை வரவேற்றனர். காவிரி நீரை பொதுப்பணித்துறையினர் சிறப்பு பூஜைகள் செய்து இரவு 10 மணி அளவில் நொடிக்கு 802 கன அடி வீதம் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து விட்டனர்.
மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஆடிப்பெருக்கை கொண்டாட தண்ணீர் இல்லாத நிலையில் ஆடி அமாவாசைக்காவது தண்ணீர் கிடைத்ததே என்ற நிலையில், ஆடிக்கு வர சொன்னால் அமாவாசைக்கு வருகிறாய் என்ற பழமொழியை நினைவுபடுத்துவது போல் உள்ளது என பொதுமக்கள் விமர்சனம் செய்துள்ளனர்