ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர்.
மின்தடை காரணமாக அப்பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்கும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இடையக்குறிச்சி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது