இன்ஜினியரிங் மாணவர் ஏரியில் மூழ்கி பலி
அரியலூர் கல்லக்குடி தெருவை சேர்ந்த சங்கர் மகன் சபரிவாசன்(20). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தொழில்துறை கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து உடையார்பாளையத்தில் உள்ள பெரிய ஏரியில் சபரிவாசன் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சபரி வாசன் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அவரை மீட்க நண்பர்கள் அரியலூரைச் சேர்ந்த சூர்யா(20),அரசு(21),சக்தி(20),சரவணன்(20) முயற்சித்தும் முடியாத நிலையில் கரைக்குத் திரும்பி சத்தம் போட்டு உள்ளனர்.
மேலும் அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் இறங்கி சபரி வாசனை தேடியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து உடையார்பாளையம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியில் இறங்கி சபரி வாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கு பிறகு சபரி வாசனை சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் உடலை கைபற்றி ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த சபரிவாசன் தனது பிறந்த நாளை சில நாட்களுக்கு முன்பு தான் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.