இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் உலக செவிலியர்கள் தினமாக மே மாதம் 12ம்தேதி கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை பந்தயசாலை பகுதியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், எனும் தலைப்பில் கவனிப்பின் பொருளாதார சக்தி என்ற கரு பொருளை முன்னிருத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி மற்றும் எஸ்என்ஆர் அறக்கட்டளையின் முதன்மை அதிகாரி சுவாதி ரோஹித் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் கலந்து கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ கல்லூரி மாணவியர்கள் தங்களது சேவைகள், சுகாதார துறையில் தங்களது பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று செவிலியர்கள் துறையின் நற்பன்புகளை எடுத்துரைத்தனர். முன்னதாக மரங்களை வெட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், வெயில் நேரங்களில் செயற்கை குளிர்வித்த தண்ணீரை பருக கூடாது, மழைநீரை சேகரிக்க வேண்டும், மண் வளத்தை காக்க வேண்டும், நிலத்தடி நீரை சேமித்து இனி வரும் தலைமுறையினருக்கு மரங்களை வைத்து அவர்களையும் காக்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு நாடகத்தை செவிலியர் மாணவர்கள் நடித்து அசத்தினர்.
இதனை தொடர்ந்து செவிலியர்கள் பணியை போற்றும் வகையிலும், நவீன செவிலியத்தின் வழிகாட்டியாக உள்ள பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் வகையில் வெள்ளை நிற பலூன்கள் பறக்க விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.