BREAKING NEWS

உத்தமபாளையம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டு

தேனி மாவட்டம் கம்பம் வடக்குபோலீஸ் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதி மற்றும் உத்தமபாளையம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டு அதிகரித்து வந்தன.

இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார்.அதன்படி உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டுவேலன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்&இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் குற்றபிரிவு போலீசார்அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பம் நகரில் போலீசார் ரோந்து பணிமேற்கொண்டனர்.அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை மகனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு 2 பேரையும் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.இதில் உத்தமபாளையம் அருகேயுள்ள கோவிந்தன்பட்டியைச் சேர்ந்த சேகர்(வயது 44) மற்றும் அவரது மகன் விக்னேஷ் (20) என்பதும் கூடலூர் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன்(43),சின்னமனூர் அருகேயுள்ள பூசாரிகவுண்டன் பட்டியைச் சேர்ந்த மகேந்திரன்(44),கூடலூரைச் சேர்ந்த ஆனந்தகுமார்(49) ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடி மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத அளவுக்கு என்ஜின் மோட்டார் உதிரி பாகங்களை கேரளா மற்றும் மதுரை பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது.மேலும் திருடி உடைக்காமல் வைத்திருந்த 13 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் சேகர் அவரது மகன் விக்னேஷ் ,ஈஸ்வரன்,மகேந்திரன்,ஆனந்குமார் வழக்கு பதிவு செய்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS